மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்: பொதுமக்கள் கருத்து


மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்: பொதுமக்கள் கருத்து
x

மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

இணைப்பது கட்டாயம்

தற்போது வங்கி கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, 'ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார். எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

ஆதார் எண் இணைப்பு நல்லது

கரூா் பசுபதிபாளையத்தை சேர்ந்த ஜி.முரளிவேல்:-

மின் இணைப்பு அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது நல்ல விஷயம்தான். இதனால் ஒரு நபருக்கு எத்தனை இணைப்பு உள்ளது என கண்டுபிடித்து விடலாம். இலவச இணைப்புகள் எவ்வளவு உள்ளது என்பதை சர்வே செய்ய சுலபமாக இருக்கும். வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை இணைப்பது போன்று, மின் இணைப்பு அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைப்பது நல்லது தான்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தோகைமலையை சேர்ந்த முத்துசாமி:-

தற்போது தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தோகைமலை பகுதியில் ஒரு மின் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைத்து வருகிறது. ஆதார் எண் இணைப்பால் 2 அல்லது 3 அல்லது அதற்கு மேல் உள்ள மின் இணைப்பிற்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் பொருந்துமா என்று தெரியாமல் ஆதார் எண்ணை இணைக்க அச்சயத்தில் இருந்து வருகின்றனர். இதனால் இந்த திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கால அவகாசம் வேண்டும்

லாலாபேட்டையை சேர்ந்த அன்பு:-

ஏற்கனவே மின் இணைப்பில் செல்நம்பர் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் நம்பரை எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் சிலரிடம் ஆதார் எண்ணில் ஒரு செல்நம்பரும், மின் இணைப்பில் ஒரு செல்நம்பரும் மாறி, மாறி இருப்பதினால் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்ட தவறும் பட்சத்தில் அபராத தொகை வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். ஆதார் எண்ணில் தற்போது செல் நம்பரை உடனடியாக மாற்ற முடியாது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஆகும். எனவே கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள் குழப்பம்

வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபியை சேர்ந்த குணசேகரன்:-

மின் இணைப்பில், ஆதார் எண்ைண இணைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது மின் நுகர்வோர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. என்ன காரணத்திற்காக இப்படி மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்போர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு தங்களுடைய ஒரே ஆதார் எண்ணை இணைப்பதால், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவருக்கு கிடைக்கும் மின் கட்டண சலுகை பாதிக்கப்படும். மேலும், தங்களுக்கும் அதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமோ என்ற ஐயம் உள்ளது. எனவே அரசு இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மின் கட்டண சலுகை பெறுவோருக்கு பாதிப்பு இருக்காது என்ற உறுதியை அளித்தபின் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இன்னல்கள் ஏற்படும்

குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி:-

வாடகை வீட்டில் பலர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவருடைய பெயரில் உள்ள மின் இணைப்பு என்னுடன் அவரது ஆதார் எண்ணை இணைக்க தவறும் பட்சத்தில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருவோர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.பின்னர் அபராத தொகையுடன் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை வரும். அபராத தொகையுடன் மின் கட்டணத்தை செலுத்தாத வரையில் வீட்டில் மின்சாரம் இருக்காது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மின்சார வாரிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வருகிறது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் சென்று மின் கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. சில மின்வாரிய அலுவலகங்களில் வசூல் செய்யும் பணியில் குறைந்த நபர்களே இருப்பதால் பொதுமக்கள் உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.அதுபோல ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒரு அறிவிப்பு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது முறையான அறிவிப்பாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மாவட்டத்தில் பல மின்சார வாரிய அலுவலகங்களில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வரும் நபர்களிடம் மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆன்லைனில் பலர் மின் கட்டணம் செலுத்த முற்படும்பொழுது மின்கட்டணத்தை அவர்களால் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒருவரது பெயரில் மின் இணைப்பு எண் இருக்கும் பொழுது அவர் இறந்துவிட்டால் மின் இணைப்பு எண்ணில் பெயர் மாற்றம் செய்யாத பட்சத்தில் மின் கட்டணத்தை அவர்களால் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும். மின் இணை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமையாக முடிவடைந்த பின்னரே எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன என்பது குறித்து தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மின்வாரியம் ஆராயுமா?

மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்று அறிவிப்பால் மின் நுகர்வோர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபராத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story