சீரமைக்கப்படாத மண் சாலையில் சிரமத்துடன் பயணம்


சீரமைக்கப்படாத மண் சாலையில் சிரமத்துடன் பயணம்
x
தினத்தந்தி 28 Oct 2022 7:18 PM GMT (Updated: 28 Oct 2022 7:20 PM GMT)

சீரமைக்கப்படாத மண் சாலையில் கிராம மக்கள் சிரமத்துடன் பயணம் செய்கின்றனர்.

பெரம்பலூர்

சேறும், சகதியுமாகிறது

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சி கே.புதூர் கிராமத்தில் இருந்து மங்களமேடு கிராமத்தில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை கொண்டு செல்லவும், மற்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லவும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

தார் சாலை

இந்த சாலையை சீரமைத்து தருமாறு கிராம சபை கூட்டங்களில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே மக்கள் நலன் கருதி இந்த சாலையை தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மிகவும் சிரமமாக உள்ளது

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி பச்சமுத்து கூறுகையில், எங்கள் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறோம். விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் வாங்கவும், விளை பொருட்களை விற்கவும், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையைத்தான் நாங்கள் அதிகம் பயன்படுத்துகிறோம். சுமார் 200 மீட்டர் நீளமுள்ள இந்த சாலை பல ஆண்டுகளாகவே சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் சென்று வர மிகவும் கடினமாக உள்ளது. அதுவும் மழைக்காலத்தில் மிகவும் சிரமமாக உள்ளது, என்றார்.

கே.புதூர் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ள ராமராசு கூறுகையில், கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு தீவன மூட்டைகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு ேதவைகளுக்கு இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறேன். சீரமைக்கப்படாத இந்த சாலையை தார் சாலையாக மாற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

சறுக்கி விழும் நிலை...

மாணவர் அழகுராஜா கூறுகையில், எங்கள் ஊரில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் மங்களமேடு கைகாட்டி சென்று, அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ்சில் செல்கிறோம். மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்லும்போது சறுக்கி விழும் நிலை உள்ளதோடு, பயணிக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது, என்றார்.

கால தாமதம்

இல்லத்தரசி தமிழிசை கூறுகையில், மருத்துவத் தேவைகளுக்கு முருக்கன்குடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வோம். அவசர சிகிச்சைகளுக்காக அல்லது மேல் சிகிச்சைகளுக்காக பெரம்பலூருக்கு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இந்த சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அங்கிருந்து பெரம்பலூருக்கு செல்கிறோம். ஆனால் சீரமைக்கப்படாத இந்த சாலையால் கால தாமதம் ஏற்படுவதோடு பயணிப்பதிலும் சிரமம் இருக்கிறது. எனவே மக்கள் நலன் கருதி, இந்த சாலையை விரைந்து சீரமைத்து, தார் சாலையாக மாற்ற வேண்டும்.


Next Story