தரைமட்ட பாலம் கட்ட பள்ளம் தோண்டியதால் வாகன ஓட்டிகள் அவதி


தரைமட்ட பாலம் கட்ட பள்ளம் தோண்டியதால் வாகன ஓட்டிகள் அவதி
x

தாத்தூர்- ஆனைமலை ரோட்டில் தரைமட்ட பாலம் கட்ட பள்ளம் தோண்டியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோயம்புத்தூர்

தாத்தூர்- ஆனைமலை ரோட்டில் தரைமட்ட பாலம் கட்ட பள்ளம் தோண்டியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தரைமட்ட பாலம்

ஆனைமலையை அடுத்த தாத்தூர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு ஆனைமலை மற்றும் பொள்ளாச்சிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில் தாத்தூரில் இருந்து ஆனைமலை வரும் ரோட் டில் தரைமட்ட பாலம் கட்டுவதற்காக பெரியபள்ளம் தோண்டப் பட்டது. அதன்பிறகு கடந்த 2 மாதமாக எந்த பணியும் நடைபெற வில்லை.

பள்ளி குழந்தைகள் அவதி

இதன் காரணமாக தாத்தூர் பகுதி மக்கள் டி.எஸ்.ஏ. நகர் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஆனைமலைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தொழிலாளிகள் வேலைக்கு செல்லவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரோட்டில் பள்ளம் தோண்டி விட்டு பணிகள் செய்யாமல் விட்டதால் அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தாத்தூர் பகுதி மக்கள் கூறியதாவது:-

பெட்ரோல் செலவு

ஆனைமலை -தாத்தூர் ரோட்டில் தரைமட்ட பாலம் கட்ட பள்ளம் தோண்டி 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதன்பிறகு எந்த ஒரு பணியும் செய்ய வில்லை. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

டி.எஸ்.ஏ.நகர் வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றி ஆனைமலைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் செலவு ஏற்படுகிறது.

தாத்தூர்- ஆனைமலை ரோட்டில் தார் இருப்பதே தெரியாமல் மண் ரோடு போல் காணப்படுகிறது.

மேலும் அந்த ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வரும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

சீரமைப்பது யார்?

அந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தாத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் மாறி மாறி அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அந்த ரோட்டுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரிய வில்லை.

இரவு நேரங்களில் ரோட்டில் தெரு விளக்குகள் எரிவது இல்லை. இதனால் தாத்தூர் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் தரைமட்ட பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே தெருவிளக்கு அமைக்க வேண்டும். தரைமட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து செய்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story