65 ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை


65 ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை
x
தினத்தந்தி 14 Jun 2023 1:00 AM IST (Updated: 14 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 65 ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் 65 ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

ஊட்டியில் அரசு விருந்தினர் மாளிகையில் கூட்டுறவு, பொது விநியோகம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விற்பனை விவரம், புதிய நகரும் ரேஷன் கடைகள் மற்றும் பகுதிநேர கடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல் கூட்டுறவுத்துறை சார்பில் செயல்படும் ரேஷன் கடைகளில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க கோரிய மனுக்கள் விவரம், கைவிரல் ரேகை பதிவு, வட்ட வழங்கல் அலுவலர்களின் தணிக்கை விவரம் குறித்து அமைச்சர் அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்தார். மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர் காப்பீடு, கடனுதவி, நுண்ணீர் பாசன திட்டம், அங்கக வேளாண் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கியூஆர் கோடு

பின்னர் துறை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு ராகி உள்ளிட்ட தானியங்கள் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துள்ள பொருட்கள் மழையில் பாதிக்கப்படாத வகையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கூட்டுறவுத்துறை மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குந்தா தாலுகாவில் 33 ரேஷன் கடைகளுக்கு கியூஆர் கோடு கொண்ட பொருட்கள் அடங்கிய மூட்டைகள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மூலம் பண்டகசாலையில் இருந்து பொருட்கள் வேறு எங்கும் செல்கிறதா என அறிய முடியும். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் மூட்டைகளில் கியூஆர் கோடு பதிவு செய்யப்பட உள்ளது. மேலும் நீலகிரியில் 65 ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை (கியூஆர் கோடு) மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story