சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
வானகிரி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை அடுத்து தினந்தோறும் ஒவ்வொரு கிராமத்தின் சார்பில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. இதில் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதனை ஒட்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்காவடி, அலகு காவடி, பன்னீர் காவடி உள்ளிட்டவைகளை மேளம் தாளம் முழங்கிட ஊர்வலமாக எடுத்து வந்தனர். முன்பாக வானகிரி அக்ரஹாரத்தில் காத்தவராயன் கல்யாணம் நடந்தது. பின்னர் காத்தவராயன், மாரியம்மன் சாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து கோவில் வாயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனை அடுத்து சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வானகிரி கிராம பொறுப்பாளர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.