தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி 1-வது வார்டு வெள்ளைகள்ளில் இருந்து விடத்தலாம்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், மணப்பாறை.

குரங்குகள் தொல்லை

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழசாலை, அம்மா மண்டபம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கிச் சென்று விடுகின்றன. அப்போது அவற்றை துரத்த முயன்றால் பொதுமக்களை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆல்பர்ட் ஸ்டீபன் ராஜ், மாம்பழசாலை.

சாலையை அகலப்படுத்த வேண்டும்

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா சிறுகனூர்- லால்குடி சாலையானது திருச்சி- சென்னை மற்றும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளை லால்குடி நகராட்சியோடு இணைக்கும் முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை சிறுகனூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரமான 8 மீட்டர் அகலத்தில் உள்ளது. நிறைய வளைவுகள் கொண்ட இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கன ரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆகையால் பூவாளூர் வரை மீதமுள்ள 10 கிலோ மீட்டர் தூரத்தையும் முழுமையான தரமான 8 மீட்டர் அகல சாலையாக அமைத்தால் மட்டுமே அடிக்கடி விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், லால்குடி.


Next Story