தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட நூலகம் ஆகியவைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தினமும் இரவு நேரங்களில் அதிக அளவில் கூட்டமாக மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே சாலையில் நிற்கிறது. மேலும் இவ்வழியே அதிக அளவில் அடிக்கடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் சென்று வருகிறது. மாடுகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக நிற்பதால் 108 ஆம்புலன்சில் விபத்துகளில் அடிபட்ட நபர்கள் மற்றும் நோயாளிகளை ஏற்றி வரும் போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் நீண்ட நேரம் சாலையிலே நிற்கிறது. மேலும் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நிம்மதியாக செல்ல முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

தெருநாய்களால் அச்சம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. தெரு நாய்கள் ஆடு, மாடு, பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அனைவரையும் கடிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆறுமுகம், ஜெயங்கொண்டம்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூரில் இருந்து செந்துறை செல்லும் சாலை முக்கிய சாலையாகும். இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் கர்ப்பிணிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும், முதியோர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், அரியலூர்.


Next Story