தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி எதிரில் அடிக்கடி மின்மோட்டார் திருடு போகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து மர்மநபர்களை பிடிப்பதோடு, இப்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சிறுவாச்சூர்.
தெருவிளக்குகள் இல்லாததால் மக்கள் அவதி
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கம்மாள் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ரங்கம்மாள் நகர்.
ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையில் உள்ள கோனேரி ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுவததோடு, தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத்தடி நீரும் மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட கோனேரி ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வாலிகண்டபுரம்.
இடையூறாக உள்ள நுழைவு வாயிற் தூண்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வரும் வழியில் நுழைவு வாயிற் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. அதில் நடுவில் உள்ள தூண் பஸ்கள் உள்ளே செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த தூணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் பெரம்பலூர்.
ஆபத்தான மின்மாற்றி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தின் வடக்கே ஏரியின் ஓரமாக மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதன் அருகே 2 மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டன. ஆனால் கம்பம் நடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்மாற்றி புதிய மின் கம்பங்களில் பொருத்தப்படாமல் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மற்றி முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.