தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

அரசு பஸ் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், கீழத்தானியம், முள்ளிப்பட்டி, ஆலம்பட்டி, அரசமலை, நல்லூர், மறவாமதுரை, ஒலியமங்கலம், கூடலூர், கொன்னையம்பட்டி, இடையாத்தூர், எம். உசிலம்பட்டி, காரையூர் என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அன்னவாசல் போலீஸ் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல மேற்கண்ட பகுதிகளில் இருந்து இலுப்பூர், புதுக்கோட்டை கல்லூரிகளுக்கு செல்ல மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காரையூர்.

எலும்புக்கூடான மின்கம்பங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி கிராமத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் பல்வேறு மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கின்றது. ஆபத்தை விளைவிக்கக்கூடிய இது போன்ற மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை நட சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தொண்டைமான்ஊரணி.

குடிநீர் தட்டுப்பாடு

புதுக்கோட்டை மாவட்டம், சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 3 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்று மட்டுமே இயங்குகிறது. இதனால் ஊர்பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயக்குமார், மேலவிடுதி.

குண்டும், குழியுமான தார்சாலை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்தியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உடையாண்டிப்பட்டி வழியாக மெய்வழிச்சாலை வரை செல்லும் 7 கிலோ மீட்டர் கிராமப்புற சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் புதுக்கோட்டையிலிருந்து மெய்வழிச்சாலை வரை 12 முறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதுடன் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சத்தியமங்கலம்.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அறந்தாங்கி.


Next Story