தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சீரமைக்கப்படாத உபரிநீர் கால்வாய்

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே இளங்கோநகர் வெள்ளதாரை வழியாக உபரி நீர் கால்வாய் செல்கிறது. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் இந்த உபரிநீர் கால்வாயை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் கால்வாய் நெடுகிலும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதனால் உபரிநீர் தங்குதடையின்றி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், இளங்கோநகர்

நங்காஞ்சி ஆற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் தற்போது அதிக அளவில் கோரைப் புற்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் ஆற்றில் விடப்பட்ட சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அருகிலேயே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளதால் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர்.

பாதியில் நிற்கும் களம் அமைக்கும் பணி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் அப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி தரைக்களம் கட்டப்பட்டது. அதை விவசாயிகள் தங்களது விலை பொருட்களை கொண்டு வந்து காயவைத்து எடுத்துச்செல்கின்றனர். அதேபோல் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தானியங்களை காய வைத்து எடுத்துச்சென்று பயன்படுத்தி வந்தனர். மழை காலங்களில் தரைக்களத்தில் இருக்கும் விவசாய பொருட்கள் மீது மழைநீர் சென்று தேங்கி நிற்பதால் அந்த களத்தை அகற்றிவிட்டு உயரமான விவசாயக்களம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் காரணமாக க உயரமாக களம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் களம் அமைக்கும் பணி முழுமை பெறாமல் பாதியிலேயே கடந்த 4 ஆண்டுகளாக இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முத்தனூர்.

மின் விளக்கு அமைக்கப்படாத பாலம்

கரூர்-ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நொய்யல் குறுக்குசாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த பாலத்தில் இதுவரை மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இருளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நொய்யல்

ரவுண்டானாவை சீரமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா திருச்சி, கரூர், மணப்பாறை, திண்டுக்கல், முசிறி, துறையூர், சென்னை செல்லக்கூடிய முக்கிய சாலை சந்திப்பாகும். இந்த சாலை சந்திப்பில் உள்ள ரவுண்டானா ஒரு பகுதி குளித்தலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும்போது இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சீரமைக்கவில்லை. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ரவுண்டானாவை சீரமைத்து பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுந்தர், குளித்தலை.


Next Story