'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

புதர்மண்டி காணப்படும் நடைபாதை

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. எனவே இந்த பாதையை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

அருண், பி.கொண்டுரெட்டிபட்டி.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை புட்டு சொக்கநாதர் கோவில் அருகில் புட்டுத்தோப்பு மைதானம் பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசந்தகுமார், மதுரை.

தொல்லை தரும் நாய்கள்

மதுரை மாவட்டம் பேரையூரில் பி.ஓ.பி. நகர் மற்றும் அண்ணா நகர் இடைப்பட்ட பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பேரையூர்.

ஆபத்தான பயணம்

மதுரை மாநகராட்சியில் காலை, மாலை வேளைகளில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தை அறியாமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி, மதுரை.

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

மதுரை மாநகராட்சி வெண்மணி மற்றும் ஜான்சிராணிபுரம் மெயின்ரோடு 29-வது வார்டு பகுதியில் சாலைகளை சிலர் ஆக்கிரமித்து காய்கறி, பழங்கள், இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வாகனஓட்டிகள் பயணிக்கவும், பாதசாரிகள் நடப்பதற்கும் போதிய வழியின்றி சிரமப்படுகின்றனர்.எனவே பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து கிருஷ்ணன், ஜான்சிராணிபுரம்.


Related Tags :
Next Story