தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

பழுதான மின்கம்பம்

சிவகங்கையில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் திருவேங்கடம் அருகே மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் தினந்தோறும் கனரக வாகனங்கள் முதல் மோட்டார் சைக்கிள் வரை ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இந்த மின்கம்பத்தால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், இளையான்குடி.

தீர்வு காணப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் வந்தவுடன் சிறப்பு பஸ்சை குறைந்த அளவில் பயணிகள் ஏறியவுடன் காத்திருக்காமல் எடுத்து விடுகின்றனர். இதனால் வயதான பயணிகள் பஸ்சில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், காரைக்குடி.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிகுறிச்சி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை அவ்வப்போது ஏற்படுகின்றது. நாளொன்றுக்கு 10 தடவைக்கு மேலாக மின்தடை ஏற்படுகின்றது. இதனால் முதியோர், பொதுமக்கள், சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், செட்டிகுறிச்சி.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டத்தில் பல கண்மாய்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இந்த கண்மாய்களில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

தொல்லை தரும் நாய்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை தெரு மற்றும் குறுக்கு தெரு பகுதியில் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. பொதுமக்கள் நடமாடும் பகுதி என்பதால் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜிஸ்கான், தேவகோட்டை.


Next Story