தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம் செயல்படாமல் உள்ளது. பிளாட்பாரங்கள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுவதுடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் குழந்தை தொழிலாளர் அறை செயல்படாமல் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், மதுரை.

குண்டும்,குழியுமான சாலை

மதுரை கூடல்நகர் அஞ்சல் நகர் பிரதான சாலை மற்றும் அசோக்நகர் தெரு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கூடல்நகர், மதுரை.

தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை வைகை ஆற்று தென்கரை பகுதியில் கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், மதுரை.

சேதமடைந்த சாலை

எஸ்.எஸ். காலனி பகுதியில் சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடந்து செல்லும் பொது கீழே விழுந்து கை மற்றும் கால்களில் காயம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.எஸ். காலனி.

பூட்டிக்கிடக்கும் நூலகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் கிளை நூலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் நூலகம் தேடி சோழவந்தான் அல்லது வாடிப்பட்டி சென்று அலைய வேண்டி உள்ளது. எனவே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நூலகம் தொடர்ந்து செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், முள்ளிப்பள்ளம், மதுரை.


Next Story