தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலக்கிடாரம், காவாகுளம், திருவரங்கை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களின் வழியாக 6 கி.மீ. தூரத்தில் உள்ள வாலிநோக்கம் செல்ல ஏதுவாக ரோடு உள்ளது.இந்த சாலையின் இடைப்பட்ட சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும்.

முனியசாமி, காவாகுளம்.

எரியாத தெருவிளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நூர் முகம்மது கம்பம் பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹுசைனா ராணி, பனைக்குளம்.

தேங்கி கிடக்கும் குப்பை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி தேவேந்திர நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் பாலீத்தீன் பைகள் அதிக அளவில் குவிந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தீர்வு கிடைக்குமா?

முனியசாமி, முதுகுளத்தூர்.

ஆபத்தான மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் ஆத்தங்கரை இடையில் இறால் பண்ணை செல்லும் மின்கம்பம் ஆபத்தான நிலை உள்ளது. மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும். பொதுமக்கள், எஸ்.பி.பட்டினம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் பல வருடங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் பயனற்று காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்களும் பயணிகளும் சிரமப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், ராமநாதபுரம்.


Next Story