தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

சேதமடைந்த சாலை

மதுரை தேனி மெயின்ரோடு டி.வி.எஸ். பகுதியில் மேம்பால வேலைகள் நடைபெற்று வருகிறது. மேற்கில் விராட்டிபத்து பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் டோக்நகர் மெயின்ரோட்டில் திருப்பி விடப்பட்டுள்ளன.மேலும் இந்த ரோடு மிகவும் சேதமடைந்து ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவளவன், மதுரை.

சுகாதார சீர்கேடு

மதுரை 57-வது வார்டு மோதிலால் 2-வது தெருவில் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன், மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், திருமங்கலம்.

செய்தி எதிரொலி

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகா குருதூர் ஊராட்சி ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அதன் பயனாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டுள்ளது. எனவே புகாருக்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராகுல், குருதூர்.

ரேஷன் கடை வேண்டும்

மதுரை 33-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் ரேஷன் கடை இல்லை. ஏற்கனவே கட்டப்பட்ட ரேஷன் கடையும் 10 வருடங்களாக திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே விரைவில் ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ராஜேந்திரபிரகாஷ்., மானகிரி.

கூடுதல் பஸ் வசதி தேவை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உசிலம்பட்டி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மதுரை மாவட்டம் சின்னமங்களக்குடி - புதுப்பட்டி விலக்கு சாலையில் மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் நான்கு சக்கர பள்ளி வாகனத்தை அச்சத்துடன் ஓட்டுனர்கள் ஓட்டி செல்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனத்தில் மின்கம்பிகள் உரசியபடி செல்வதால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.எனவே தொங்கிய நிலையில் காணப்படும் மின்கம்பிகளை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

க.பாண்டியன், ஒத்தக்கடை.

பொதுமக்கள் அச்சம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, சோழவந்தான்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் யா.தேத்தாங்குளம் அருகில் நரசிங்கத்தில் இருந்து நரசிங்க பெருமாள் கோவில் செல்லும் வழியில் சமணர்சிற்பங்கள் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரு, யா.தேத்தாங்குளம்.

உடைந்த சாக்கடை மூடி

மதுரை நகர் பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இங்கு 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுபக்கர், மதுரை.


Next Story