தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோர் வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்து அலுவலகம் வரை மிகுந்த சிரமத்துடன் நடந்தோ அல்லது பிறரின் உதவியுடனோ செல்கின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பஸ் நிறுத்தம் முதல் அலுவலகம் வரை சக்கர நாற்காலி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
கூடுதல் பஸ்வசதி
விருதுநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவு தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வகுமார், ஆலங்குளம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் சிலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் குறுக்கிடுவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிககை எடுக்க வேண்டும்.
முருகன், நரிக்குடி.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை ஊராட்சி மாத்தநாயக்கன்பட்டி மேற்கு காலனி தெரு பகுதியின் முக்கிய சாலையில் இருந்து தெருவிற்கு இறங்கும் பாதை மிகவும் ஆபத்தான நிலையில் உயரமாக உள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், நிலை தடுமாறி கிழே விழுந்து கை, கால் முறிவுகள் ஏற்படுகிறது. எனவே இந்த பாதையை சமப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பரத்ராஜா, சூலக்கரை.
பழுதான தெருவிளக்குகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதான தெருவிளக்குகளை சீரமைத்து அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.