தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

எரியாத தெருவிளக்குகள்

மதுரை மாடக்குளம் மயானம் அருகில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இருள்சூழ்ந்து காணப்படுவதால் இந்த வழியாக பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், மதுரை.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

மதுரை திருவள்ளுவர் 8-வது தெரு பகுதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடுடன் ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரகாஷ், மதுரை.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விப்பட்டி பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் சிலர் அவதியடையும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியராஜா, மதுரை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் கோ.புதூர், சங்கர் நகர், ராமவர்ம நகர் பகுதியில் சாலையில் அவ்வப்போது கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோ.புதூர், மதுரை.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாட்டுத்தாவணி மேலூர் ரோடு சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பூ மார்க்கெட், உத்தங்குடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மாட்டுத்தாவணி ரோடு, மதுரை.


Next Story