தினத்தந்தி - ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி


தினத்தந்தி - ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x

தினத்தந்தியும், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருநின்றவூரில் 22-ந் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைக்கிறார்.

திருவள்ளூர்

பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பதை அவர்களே அறிந்து கொள்வதற்கு வசதியாக வெற்றி நிச்சயம் என்ற சிறப்பு மிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை 'தினத்தந்தி' நாளிதழ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

கடந்த 19 ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி தற்போது 20-வது ஆண்டாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

அனுமதி இலவசம்

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சென்னை திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி சென்னை திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 22-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

மதிய உணவு

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் எழுதுவதற்கு ஒரு பேனா, பேடு ஆகியவற்றுடன் அழகிய போல்டர் இலவசமாக வழங்கப்படும். மதியம் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும். காலையிலும், மாலையிலும் தேநீர், பிஸ்கெட் இலவசமாக வழங்கப்படும்.

கலெக்டர் தொடங்கி வைக்கிறார்

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை 22-ந் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கிவைத்து தலைமை உரையாற்றுகிறார். ஜெயா கல்வி நிறுவனங்கள் தலைவர் ஏ.கனகராஜ் முன்னிலை வகித்து பேசுகிறார்.

கல்விப்பணியில் 'தினத்தந்தி' என்ற தலைப்பில் தினத்தந்தி தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ர.தனஞ்செயன் உரையாற்றுகிறார்.

மருத்துவம், பொறியியல்

இதையடுத்து பலதுறை வல்லுனர்கள் உரையாற்றுகிறார்கள். மருத்துவ துறை மற்றும் நீட் நுழைவுத்தேர்வு குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினரும், கல்வியாளருமான ஆர்.காயத்ரி பேசுகிறார். கலை மற்றும் அறிவியல் குறித்து ஜெயா கல்லூரி தமிழ்துறை தலைமை மற்றும் உதவி பேராசிரியை எஸ்.சுதா பேசுகிறார்.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டித்தேர்வுகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் கோவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை துணை இயக்குனர் எம்.கருணாகரன் பேசுகிறார். பொறியியல் துறை குறித்து சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜே.பிரான்சிஸ் சேவியர் உரையாற்றுகிறார்.

சட்டம், கேட்டரிங்

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சட்டத்துறை குறித்து சேலம் சட்ட கல்வியாளர் வக்கீல் பி.ஆர்.ஜெயராஜன் பேசுகிறார். பட்டயக்கணக்கியல் துறை குறித்து மதுரையை சேர்ந்த சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி, விளையாட்டுத்துறை குறித்து சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எம்.கிரேஸ் ஹெலினா ஆகியோர் பேசுகிறார்கள்.

முடிவில் சென்னை தினத்தந்தி மேலாளர் ஆர்.சதீஷ்குமார் நன்றி கூறுகிறார்.

நிகழ்ச்சியை மதுரை புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார். உணவு இடைவேளையின்போது நன்னிலம் கேசவனின் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story