'தினத்தந்தி' செய்தி எதிரொலி:கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி:கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 30 Jun 2023 12:30 AM IST (Updated: 30 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு


தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது.


குண்டும், குழியுமான சாலை


கோவை-பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் கிணத்துக்கடவில் மேம்பாலம் உள்ளது. இதன் அருகில் கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை வழியாக அண்ணாநகர், செம்மொழி கதிர் நகர், பகவதிபாளையம், சாலைப்புதூருக்கு செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ஊருக்குள் வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த சர்வீஸ் சாலை வழியாகத்தான் கிணத்துக்கடவுக்கு வருகிறது. இந்தநிலையில் இந்த சர்வீஸ் சாலை மிகவும் குறுகளாக உள்ளதால் அதை விரிவுபடுத்தி தர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.


மேலும், அந்த சாலையோரத்தில் புதர் செடிகள் வளர்ந்துள்ளன. இதேபோல் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக மாறி காணப்பட்டது. மேலும் அருகில் உள்ள கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் கிடந்த குழியில் கழிவு நீர் தேங்கி அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அவதி அடைந்து வந்தனர்.


தற்காலிகமாக சீரமைப்பு


இது குறித்த செய்தி கடந்த 25-ந் தேதி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சாலையில் கிடந்த குழிகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் ஜல்லி கற்களை போட்டு குழிகளை தற்காலிகமாக மூடியுள்ளனர். இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பலமுறை நாங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இந்த சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி தரவேண்டும் என கூறியும் அகலப்படுத்தி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.


நிரந்தர நடவடிக்கை


அதேபோல் இந்த சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு வருவதால் அந்த பள்ளத்தை சரிவர சீரமைக்காமல் தற்காலிகமாக நெடுஞ்சாலை துறையினர் ஜல்லிக்கற்களைபோட்டு மூடி சென்று விடுகின்றனர். கடும் மழை பெய்யும் நேரத்தில் ஜல்லிகளை அடித்து சென்று விடுவதால் மீண்டும் அதே பகுதியில் குழி ஏற்படுகிறது.


இதனை தவிர்க்க நெடுஞ்சாலை துறையினர் இந்த குழிகள் நிறைந்த பகுதியை நேரில் பார்வையிட்டு சாலையில் நிரந்தரமாக குழிகள் ஏற்படாதவாறு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story