'தினத்தந்தி' செய்தி எதிரொலி: குற்றாலம் மனநல வைத்தியசாலைக்கு 'சீல்' வைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி: குற்றாலம் மனநல வைத்தியசாலைக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, குற்றாலம் மனநல வைத்தியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, குற்றாலம் மனநல வைத்தியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

வாலிபருக்கு சூடு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் மையப்பகுதியில் குரு சித்த வைத்தியசாலை என்ற தனியார் மனநல ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இங்கு சங்கரன்கோவில் சங்கர்நகரைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான ஆறுமுகம் என்பவரின் மகன் உமா மகேஸ்வரன் (வயது 37) சிகிச்சை பெற்று வந்தார். இங்கு பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது மகனை பார்க்க அங்கு சென்றார். அப்போது அவர் மிகவும் மோசமான நிலையில் படுத்து இருந்ததை கண்டார். அவரது உடலில் சூடு வைக்கப்பட்டதால் கருப்பு நிற கோடுகள் மற்றும் கொப்புளங்கள் இருந்தன. இதனால் அவர் தனது மகனை அங்கிருந்து அழைத்துச் சென்று தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அதிகாரிகள் சோதனை

அவர் கூறுகையில், குற்றாலம் ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை நடைபெறவில்லை. அங்கு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்றார். இதுகுறித்த செய்தி உமா மகேஸ்வரனின் படத்துடன் 'தினத்தந்தி'யில் வெளியானது.

இதையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, மனநல டாக்டர் நிர்மல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் நேற்று அந்த வைத்தியசாலைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். வைத்தியசாலை நடத்தி வந்தவர்களிடம் உரிய அனுமதி எதுவும் இல்லாததை கண்டுபிடித்தனர். மேலும், ஆஸ்பத்திரிக்கு தேவையான அரசு உத்தரவுகள் எதுவும் அவர்கள் பெறவில்லை என்பதும், முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

சீல் வைப்பு

இதைத் தொடர்ந்து அந்த வைத்தியசாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு பெண் நோயாளி உள்பட 12 பேரை அங்கிருந்து மீட்டு வடகரையில் உள்ள அரசு அனுமதி பெற்ற அன்பு ஆசிரமத்தில் சேர்த்தனர்.

நீண்ட நாட்களாக சுற்றுலா தலத்தில் அனுமதி பெறாமல் இந்த வைத்தியசாலை எப்படி இயங்கியது? என்றும், இந்த வைத்தியசாலை இயங்குவதற்கு வேறு யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story