'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு


தினத்தந்தி செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அரசு பள்ளியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் துர்நாற்றம் வீசுவதாக பல்வேறு புகார் வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட தரக்கட்டுப்பாட்டு உதவி மேலாளர் பன்னீர்செல்வம், ஆலங்குடி கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரில் வந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அரிசி, பருப்புகளை 2 முறை சுடுதண்ணீரில் உப்பு கலந்து அலசிய பிறகே சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் உணவு தயாரித்த பிறகு மாணவர்களுக்கு பரிமாறும் முன்பு தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் ஆகியோர் சாப்பிட்டு பார்த்த பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்கக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள்.

இதேபோல் கீரமங்கலம் பகுதியில் உள்ள மேலும் சில பள்ளிகளையும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story