'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


தினத்தந்தி செய்தி எதிரொலி: கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குண்டும்- குழியுமான சாலை

கிணத்துக்கடவிலிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை லட்சுமி நகர், கொண்டம்பட்டி, வடயசித்தூர், பெரிய களந்தை, மெட்டுவாவி, காட்டம்பட்டி, பல்லடம், திருப்பூர், செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமி விநாயகர் பகுதியில் இருந்து வடசித்தூர் வரை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கிணத்துக்கடவு ரெயில்வே மேம்பால பகுதியில் இருந்து லட்சுமி நகர் வரை சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள தார் சாலை பல இடங்களில் குண்டு குழியுமாக காணப்பட்டதோடு பல்லாங்குழி போல் காட்சி அளித்தது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்தது. மேலும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

சாலை சீரமைப்பு பணி தொடக்கம்

இதுகுறித்த செய்தி "தினத்தந்தி" நாளிதழில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பழுதடைந்த சாலையை பார்வையிட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க பணிகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் குண்டு குழியுமாக காணப்பட்ட சாலை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டு சாலையை சமன்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கப்பட்ட சாலை தினத்தந்தி செய்தி எதிரொலியால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story