திண்டுக்கல்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - வாலிபர் பலி
அய்யலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 33). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பொன்னர்(25) கூலி தொழிலாளி.
நேற்று இரவு இவர்கள் இருவரும் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவில் கரகாட்டம் பார்ப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.பின்னர் கரகாட்டம் முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பொன்னர் ஓட்டி வந்தார்.
அப்போது திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்ற போது சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த பொன்னர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.