'திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாகமாற்ற பாடுபடுவேன்'


திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாகமாற்ற பாடுபடுவேன்
x

‘திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக மாற்ற பாடுபடுவேன்’ என்று புதிய ஆணையராக பதவி ஏற்ற மகேஸ்வரி தெரிவித்தார்.

திண்டுக்கல்

புதிய ஆணையர் பதவி ஏற்பு

நகராட்சியாக இருந்து வந்த திண்டுக்கல், கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் 4-வது ஆணையராக சிவசுப்பிரமணியன் பணியாற்றினார். இவர், கடந்த மாதம் 31-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இதையடுத்து மாநகராட்சியின் 5-வது ஆணையராக சென்னையில், தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் செயலாளராக பணியாற்றிய மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஸ்வரி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக எனது பணியை தொடங்கியுள்ளேன். அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக மாற்ற பாடுபடுவேன் என்றார்.

சிறந்த நகராட்சி

புதிய ஆணையராக பதவி ஏற்ற இவர் திருப்பூரை சேர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற இவர், மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் வரிசையில் முதல் இடத்தையும் பிடித்தார். பின்னர், அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார்.

பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றிய இவர், அதற்காக 2014-ம் ஆண்டு விருதும் பெற்றார். அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவர் பணியாற்றி உள்ளார். இதில் குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டில் தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்கு இவருக்கு விருது வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி தேர்வு செய்யப்பட்டதை போல் தற்போது மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story