திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் காய்கறிகளை இறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி மார்க்கெட்
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள், விற்பனைக்காக காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
மேலும் காந்தி மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் தினமும் 25 டன்களுக்கு மேல் காய்கறிகள் விற்பனை ஆகிறது. திருமண முகூர்த்த நாட்களில் காய்கறி விற்பனை மேலும் அதிகரித்து விடுகிறது. இதற்காக கிராமங்களில் இருந்து நள்ளிரவு முதலே காய்கறிகள் வரத்தொடங்கி விடும். அதிகாலை 4 மணி முதல் காய்கறி விற்பனை தொடங்கும்.
மோதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வியாபாரிக்கும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதை பார்த்த பிற கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்களில் சிலரை, ஒரு கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் காய்கறி மூட்டைகளை இறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலை 7 மணி வரை மார்க்கெட்டில் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் காய்கறிகள் இறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
இதற்கிடையே சுமை தூக்கும் தொழிலாளர்கள், வியாபாரி மோதல் சம்பவம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இதையொட்டி காந்தி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.