திண்டுக்கல்-பாலக்காடு இடையே ரூ.242 கோடியில் ரெயில் மின்பாதை


திண்டுக்கல்-பாலக்காடு இடையே ரூ.242 கோடியில் ரெயில் மின்பாதை
x

திண்டுக்கல்-பாலக்காடு இடையே ரூ.242 கோடி செலவில் அமைக்கப்பட்ட ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை

கேரள மாநிலம் பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதை பயன்பாட்டில் இருந்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூரம் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே நாடு முழுவதும் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.242 கோடி மதிப்பில் திண்டுக்கல்-பாலக்காடு இடையேயான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி, கடந்த 3 ஆண்டுகளாக நடந்தது.

இதில் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு என 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவுபெற்றன.

பிரதமர் திறந்து வைத்தார்

அதன்பின்னர் ரெயில் என்ஜின், 3 பெட்டிகளுடன் கூடிய ரெயில் ஆகியவை திண்டுக்கல்-பாலக்காடு இடையே இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது.

அதன்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாத ஆனந்த், திண்டுக்கல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பழனியில் நடந்த நிகழ்ச்சியில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் பழனிச்சாமி தெற்கு ெரயில்வே மதுரை கோட்ட முதன்மை பொறியாளர் நாராயணன், முதன்மை வர்த்தக மேலாளர் ரதி பிரியா, பொறியாளர் ராம் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பழனி ெரயில் நிலைய மேலாளர் முருகபெருமாள் நன்றி கூறினார்.


Next Story