திண்டிவனம் - நகரி ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


திண்டிவனம் - நகரி ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திண்டிவனம்- நகரி ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராணிப்பேட்டை

தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திண்டிவனம்- நகரி ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராணிப்பேட்டை ரெயில் நிலையம்

இந்தியாவின் முதல் ரெயில் மும்பை- தானே இடையே இயக்கப்பட்டது. அதன் பின்னர் தென் இந்தியாவின் முதல் ரெயில், சென்னை ராயபுரம் -வாலாஜா ரோடு இடையே 1856-ம் ஆண்டு இயக்கப்பட்டது. இதன் பின்னர் ராணிப்பேட்டை வரை ரெயில் பாதை நீட்டிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையின் பொருட்களை எடுத்து செல்வதற்காகவும், பயணிகள் சேவைக்காகவும் ராணிப்பேட்டை ரெயில் நிலையம் பயன்பட்டு வந்தது.

பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 1995-ம் ஆண்டு ராணிப்பேட்டை ரெயில் நிலையம் பயன்பாடு இல்லாமல் போனது. இதனை அடுத்து ராணிப்பேட்டை ரெயில் நிலையத்திற்கும், வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கும் இடையில் இருந்த ரெயில்வே தண்டவாளங்களை ஏலம் விட போவதாக தகவல் பரவியது.

போராட்டம்

இதனையடுத்து ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினரும், நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட சமூக சேவை அமைப்புகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தை அகற்றக்கூடாது, மாறாக இந்த ரெயில் நிலையம் வழியாக, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து விழுப்புரம் வரை ரெயில் விட வேண்டும், இதன் மூலம் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கும், ரெயில்வே துறைக்கும் வைத்தனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் விளைவாக, திண்டிவனம் - ஆந்திர மாநிலம் நகரி இடையே ரெயில் பாதை தொடங்கும் திட்டத்தை அப்போது மத்திய ரெயில்வே இணை அமைச்சராக இருந்த ஆர்.வேலு கொண்டு வந்தார்.

அதன்படி திண்டிவனம்- நகரி இடையே 184.45 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டம் 2006-2007-ம் ஆண்டிற்கான துணை மானிய கோரிக்கைகளுக்கான அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை சுமார் ரூ.583 கோடியில் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2007-ம் ஆண்டு ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.

இதுநாள்வரை ரெயில் தொடர்பு வசதி இல்லாத வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ரோடு மற்றும் சோளிங்கர் டவுன் ஆகிய இடங்கள் வழியாக அமைக்கப்பட உள்ள இந்த புதிய ரெயில்பாதை தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் சென்னை எழும்பூர்-விழுப்புரம் ரெயில் பிரிவில் உள்ள திண்டிவனம் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம்-ரேணிகுண்டா ரெயில் பிரிவில் உள்ள நகரி ரெயில் நிலையத்தினை இணைக்கும் இந்த பாதையில் 19 புதிய ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள திண்டிவனம், வாலாஜா ரோடு மற்றும் நகரி ரெயில் நிலையங்கள் ரெயில் சந்திப்புகளாக (ஜங்சன்) செயல்படும்.

நிலம் கையகப்படுத்தும் பணி

சமவெளி மற்றும் மேடான நிலப்பரப்புகளின் வழியாக செல்லும் இந்த ரெயில் பாதையின் குறுக்கே பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகள் கடக்கின்றன. இரண்டு நெடுஞ்சாலைகளும் ரெயில்பாதையை கடக்கும்.

இந்த ரெயில் பாதையில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 11 சாலை மேம்பாலங்கள், 66 லெவல் கிராசிங்கள், 30 சுரங்கப் பாலங்கள் அமைக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக இந்த ரெயில் பாதை அமைய உள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக ராணிப்பேட்டை, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தன.

ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாறியதாலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததாலும் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற ஜெகத்ரட்சகன் எம்.பி., விஷ்ணு பிரசாத் எம்.பி. ஆகியோர் பாராளுமன்றத்தில் பேசி உள்ளனர். ஆனாலும் இத்திட்டம் இன்னமும் விரைந்து செயல்படுத்தப்படவில்லை.

வரப்பிரசாதமான திட்டம்

தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த புதிய ரெயில்பாதை இந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் ஊக்கமளிக்கும்.

சாலை போக்குவரத்தினையே நம்பி இருக்கும் இந்த பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்த அகல ரெயில்பாதை போக்குவரத்து வழிவகுக்கும். பயணிகள் போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் ஆகியோருக்கு திண்டிவனம்-நகரி ரெயில் போக்குவரத்து ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இந்த புதிய ரெயில்பாதை இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் தேவையினை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது தொழில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் மக்களை தேசிய நீரோட்டத்துடன் ஒருங்கிணைக்கும் பாலமாகவும் திகழும்.

திண்டிவனம்- நகரி ரெயில் பாதை திட்டம் தமிழகத்தின் வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் ரெயில் போக்குவரத்தில் இணைக்கும் மிகச்சிறந்த திட்டமாகும். இதற்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கி, ரெயில் சேவை தொடங்கும் பட்சத்தில், இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து, பொருளாதார வளர்ச்சியும் மேலோங்கும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கு மாநில அரசும் துணை நின்று, இத்திட்டம் விரைவில் நிறைவேற வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.


Next Story