அரசு கலைக் கல்லூரிகளில் நேரடி கலந்தாய்வு தொடங்கியது


அரசு கலைக் கல்லூரிகளில் நேரடி கலந்தாய்வு தொடங்கியது
x

கோவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நேரடி கலந்தாய்வு தொடங்கியது.

கோயம்புத்தூர்

கோவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நேரடி கலந்தாய்வு தொடங்கியது.

மாணவர் சேர்க்கை

தமிழக அரசு கல்லூரிகளில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கலை கல்லூரி மற்றும் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய 6 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

கலந்தாய்வு

கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.ஏ. உள்ளிட்ட 26 படிப்புகள் உள்ளது. இதில் நடப்பாண்டில், மொத்தம் 1,443 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இதற்காக, 39 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதையடுத்து, தரவரிசை அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முதல் வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி அவர்களின் செல்போன் மற்றும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

சிறப்பு பிரிவு மாணவர்கள்

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு காலை 10 மணியளவில் தொடங்கியது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், சிறப்பு பிரிவு, என்.சி.சி. மாணவர்கள், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள், ராணுவத்தில் வீரர்களின் வாரிசுகள் என மொத்தம் 687 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதில்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் நடப்பாண்டில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்பட 5 பாடப் பிரிவுகளில் மொத்தம் 240 இடங்கள் உள்ளன.

இவர்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஏராளமான மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.


Next Story