நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது-விவசாயிகள் வலியுறுத்தல்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது-விவசாயிகள் வலியுறுத்தல்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை பணி முடியும் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை பணி முடியும் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. எனவே நெல் அறுவடை பணி முடியும் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது. மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

கால்நடைகளை பராமரிப்பதற்கான செலவினம் அதிகரித்து இருப்பதால், பால் கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி வழங்க வேண்டும். இது தொடர்பாக முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் கோட்டாட்சியர் தலைமையில் சமையல் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு வராமல் உள்ள அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிஷான் திட்டத்தில் முறைகேடு

ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் அரக்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story