மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரெயில் சேவை


மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரெயில் சேவை
x
தினத்தந்தி 25 Aug 2023 12:32 AM IST (Updated: 25 Aug 2023 3:42 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரெயில் சேவை வருகிற 28-ந் தேதி முதல் தொடங்குகிறது.

தஞ்சாவூர்

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரெயில் சேவை வருகிற 28-ந் தேதி முதல் தொடங்குகிறது.

மயிலாடுதுறை-சேலம் இடையே ரெயில் சேவை

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரின் பல ஆண்டு கால கோரிக்கையாகும்.

இந்த நிலையில் மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்களின் இணைந்த சேவைக்கான கருத்துரு ஒன்றை தென்னக ரெயில்வே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியது. அதற்கு ரெயில்வே வாரியம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

28-ந் தேதி முதல் இயக்கம்

தற்போது இந்த இணைக்கப்பட்ட ரெயிலுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து அதற்கான கருத்துருவை ரெயில்வே வாரிய ஒப்புதலுக்கு பரிந்துரை செய்த திருச்சி, சேலம் கோட்டம் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கும், ஒப்புதல் வழங்கிய ரெயில்வே வாரிய அதிகாரிகளுக்கும், கோரிக்கை நிறைவேற உதவிய அரசியல் கட்சியினருக்கும், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த புதிய ரெயில் சேவை தொடக்க நாளான 28-ந் தேதி கும்பகோணத்தில் வழக்கம்போல் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்றும் சங்க செயலாளர் கிரி தெரிவித்தார்.

மயிலாடுதுறை-சேலம் புதிய விரைவு ரெயில் மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. அங்கிருந்து பெங்களூரு செல்ல விரும்புவோர் மதியம் 2.40 மணிக்கு புறப்படும் காரைக்கால்-பெங்களூரு ரெயிலை (வ.எண் 16530) பயன்படுத்திக்கொள்ளலாம். மதியம் 3.35 மணிக்கு புறப்படும் சேலம்-பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ. எண் 12678) பயணம் செய்யலாம் என பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சரவணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்கும்

தினமும் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக சேலத்தை மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது. சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மயிலாடுதுறையை இரவு 9.40 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் மயிலாடுதுறை-சேலம் இடையே குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, அய்யம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை, தஞ்சை, ஆலக்குடி, பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் இதன் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story