குளத்தில் தேங்கி கிடக்கும் அசுத்தமான தண்ணீர்


குளத்தில் தேங்கி கிடக்கும் அசுத்தமான தண்ணீர்
x

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் வெளியேற வழியின்றி குளத்தில் அசுத்தமான தண்ணீர் தேங்கி கிடக்கிறது.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் வெளியேற வழியின்றி குளத்தில் அசுத்தமான தண்ணீர் தேங்கி கிடக்கிறது.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்தை குளம்

கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் உள்ளது சேகரை கிராமம். இந்த கிராமத்தையொட்டி செத்தைகுளம் உள்ளது. இந்த குளத்தினை 40 ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் மற்றும் கோடை காலங்களில் குடிநீர் ஆதாரத்திற்காகவும் இங்கு உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாமல் இந்த குளத்தில் தண்ணீர் மாசடைந்தது. தற்போது பெயருக்கு ஏற்றாற்போல் இந்த குளம் முழுவதும் செத்தைகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி காணப்படுகிறது.

தொற்று நோய்கள் பரவும் அபாயம்

இந்த குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் 30 ஆண்டுகளாக தண்ணீர் வெளியேற வழியின்றி அசுத்தமாக காணப்படுகிறது. குளத்தை சுற்றிலும் வீடுகள் மற்றும் அரசு பள்ளி உள்ளது.

இந்த குளத்தில் தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த தண்ணீரில் கொசுகள் உற்பத்தியாகி அந்த பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

தூர்வார வேண்டும்

அதிகாரிகள் இந்த குளத்தை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய அளவில் சுகாதார பாதிப்பு ஏற்படும் முன்பு வடிகால் வாய்க்காலை தூர்வாரவும், குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி விட்டு அசுத்தமான தண்ணீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story