அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளி பயணிகள் கடும் அவதி
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளி பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை ரெயில் நிலையம்
புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானது. மதுரை கோட்ட ரெயில்வேயில் ஒரு தொன்மையானதாக இந்த ரெயில் நிலையம் காணப்படுகிறது. புதுக்கோட்டை வழியாக சென்னை, ராமேசுவரம், புதுச்சேரி, செங்கோட்டை, கோயம்புத்தூர், காரைக்குடி, மானாமதுரை, திருச்சி, புவனேஸ்வர், ஹீப்ளி உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் புதுக்கோட்டையில் இருந்து ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நடைபாதை மேம்பாலம்
இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 1 மற்றும் 2-வது நடைமேடைகளில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 1-வது நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு பயணிகள் சென்று வர நடைபாதை மேம்பாலம் உள்ளது.
இதில் மாற்றுத்திறனாளி பயணிகள் தவிர மற்ற பயணிகள் சாதாரணமாக சென்று வர முடியும். அதேநேரத்தில் மாற்றுத்திறனாளி பயணிகள் 2-வது நடைமேடைக்கோ அல்லது அங்கிருந்து முதலாவது நடைமேடைக்கு வர பெரும் சிரமம் அடைகின்றனர். இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல போதுமான பஸ் வசதி இல்லை எனவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
பேட்டரி கார் வசதி
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தங்கவேல்:- ``புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் எதுவும் போதுமானதாக இல்லை. ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும் நடந்து செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் நடை மேடைகளுக்கு சென்றுவர ஏதுவாக லிப்டு வசதி, சாய்வு தளம் ஏற்படுத்த வேண்டும். ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியும் வசதியில் நடைமேடையில் டிஜிட்டல் பலகை வைக்க வேண்டும். ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க வேண்டும்.''
அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்
மாற்றுத்திறனாளி பயணி சித்ரா தேவி:- ``ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சக்கர நாற்காலிகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமேடைகளுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர வசதி ஏற்படுத்த வேண்டும். ரெயில்களில் கழிவறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வசதி ஏற்படுத்த வேண்டும்.''
பஸ் வசதி
பயணி கார்த்திகேயன்:- ``புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாமல் உள்ளது. பகல் நேரத்தில் ரெயில் வருகிற நேரத்தில் பெயரளவுக்கு மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். பஸ் இல்லாத போது குடும்பத்தோடு பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வர கூடுதல் செலவு ஏற்படுகிறது.
உடைமைகளை தூக்கிக்கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில் நாங்கள் 15 பேர் சென்னையில் இருந்து ரெயில் மூலம் இரவு 12.20 மணி அளவில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தோம். ரெயில் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் வந்தோம். இதற்கு கட்டணமே அதிக தொகையானது. எனவே இயக்கப்பட்ட அரசு பஸ்களை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முழுமையான மேற்கூரை வசதி தேவை
மேலும் பயணிகள் தரப்பில் கூறுகையில், ``அம்ரித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்த புதுக்கோட்டை ரெயில் நிலையம் தேர்வாகி உள்ளது. இதில் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர் வசதி, ரெயில் நிலையத்தில் கூடுதலாக குடிநீர் வசதி, ரெயில் நிலைய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மேற்கூரை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பாழடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுதல், நவீன கழிவறை வசதி, கேண்டீன் வசதி, ரெயில்கள் வந்து புறப்படும் நேரம் அறிவதற்கான டிஜிட்டல் அறிவிப்பு பலகையை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைக்க வேண்டும். முதலாவது மற்றும் 2-வது நடைமேடையில் முழுமையான மேற்கூரை வசதி இல்லாததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் நடந்து வரும் போது கடும் அவதி அடைகின்றனர். இதனால் 2 நடைமேடைகளில் ரெயில் பெட்டிகள் நிற்கும் அளவிற்கு முழுமையாக மேற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும்'' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளனர். பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை ரெயில்வே நிர்வாகத்திடம் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.