கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின் போது, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே இழப்பீடு கேட்டுஅடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின் போது, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே இழப்பீடு கேட்டுஅடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முசிறியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான கோவிந்தராஜ் (வயது 39), ஞானசேகரன் (38), நாராயணசாமி (35) ஆகியோர் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதில் கோவிந்தராஜ் தனக்கு கிராம உதவியாளர் பணி வழங்கக்கோரியும், ஞானசேகரன் நகராட்சி கடை கேட்டும், நாராயணசாமி அரசு வேலை வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து, கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டுமனு
மணப்பாறை அமையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமையில் குளத்தூராம்பட்டி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்படும். நிதி பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. இந்த ஆண்டு குளத்தூராம்பட்டியில் அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே அதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
திருச்சி வளர்ச்சிக்குழுமம் தலைவர் திலீப் தலைமையில் அளித்த மனுவில், திருச்சியை தமிழகத்தின் துணை தலைநகரமாக அறிவிக்க வேண்டும். திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு பொதுமருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இழப்பீடு
திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு உரிய அங்கீகாரம் பெறவில்லை என கூறி இடிக்கப்பட உள்ளது. அங்கு குடியிருந்து வருபவர்களுக்கு மாற்று இடமோ அல்லது இழப்பீடோ வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி 6 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை எங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் எங்களை காலி செய்ய சொல்லி மிரட்டுகிறார்கள். ஆகவே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 92 குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கோவில் திருவிழா
லால்குடி அன்பில் கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராமவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு திருவிழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி உதவி கலெக்டர் அனுமதி மறுத்துள்ளார். ஆகவே கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.இது குறித்து அவர்கள் கூறும்போது, ஆண்டாண்டு காலமாக கோவில் திருவிழாவின்போது, சாமி திருவீதி உலா நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமூகத்தினர் தங்கள் பகுதிக்கும் சாமி வீதிஉலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்தசமய அறநிலையத்துறையும் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்தது. ஆனால் உதவி கலெக்டர் அனுமதி மறுத்து வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.
இதேபோல் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 550 மனுக்கள் பெறப்பட்டன.