பாரம்பரியமாக நடத்தும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்காதது ஏற்புடையதல்ல- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


பாரம்பரியமாக நடத்தும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்காதது ஏற்புடையதல்ல- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x

பாரம்பரியமாக நடத்தும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்காதது ஏற்புடையதல்ல- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

மதுரை


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த தளக்காவூர் பகுதியை சேர்ந்த மரியசெல்வராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராம திருவிழாவையொட்டி பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தி வந்தோம். 2017-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பான அரசாணையில் எங்கள் கிராமத்தின் பெயர் விடுபட்டுவிட்டது. தற்போது எங்கள் கிராமத்தை போல விடுபட்ட கிராமங்களையும், அந்த அரசாணையில் சேர்க்கும்படி மனு கொடுக்கும்பட்சத்தில் அந்தந்த கிராமங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.

எனவே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கும் பகுதிகளில் எங்கள் கிராமத்தையும் சேர்த்து அரசாணை வெளியிடவும், எங்கள் கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கும்படியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் மலம்பட்டி, குமாரபேட்டை, பனகுடி, அரியக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார். பாரம்பரியமாக இந்த கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடந்து வருகிறது. ஆனால் தற்போது அனுமதி வழங்க போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று அரசு தரப்பில் அளித்த பதில் ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், மனுதாரர் கிராமத்தில் விதிமுறைகளை பின்பற்றி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பான அரசாணையிலும் இந்த கிராமத்தை சேர்க்க மாவட்ட கலெக்டர் பரிசீலிக்கும்படியும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story