கோவையில் பேரிடர் மேலாண்மை குழு
கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரப்பர் படகு உள்பட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
கோவை
கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரப்பர் படகு உள்பட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேவையான உபகரணங்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு ரப்பர் படகுகள், கயிறுகள், மிதவை ஜாக்கெட்டுகள், காற்று நிரப்பிய ரப்பர் வளையங்களும் உள்ளன.
செயல்விளக்கம்
தமிழக தீயணைப்பு துறை இயக்குனர் அபாஷ்குமார் உத்தரவின்பேரில் இணை இயக்குனர் சத்தியநாராயணன் மேற்பார்வையில் கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை தலைமையில் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் வீரர்களுக்கு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
ரப்பர் படகுகள்
இதுகுறித்து கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை கூறியதாவது:-
கோவையில் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நீச்சல் உள்பட சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மேலும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 250 வீரர்கள், 15 பெரிய வாகனங்கள், 4 சிறிய வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ்கள், 3 ரப்பர் படகுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.