சாரண ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
பரமக்குடியில் சாரண ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் சாரண-சாரணியர் பொறுப்பாசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி செயல்விளக்கம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலு முத்து தலைமை தாங்கினார். பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட சாரணர் அமைப்புச் செயலாளர் கணபதி வரவேற்றார். நளினி ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில் மாவட்ட சாரண ஆணையர் சேதுராமன், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் அஜ்மல்கான், பள்ளி துணை ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதில் 12 பள்ளிகளைச் சேர்ந்த சாரண-சாரணிய பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கருத்தாளர்களாக மாவட்ட சாரண பிரதிநிதிகள் ஆரோக்கிய அருள்தாஸ், சரவணகுமார் ஆகியோர் சாரணர் உறுதிமொழி, சாரணர் சட்டம், இயக்க வரலாறு குறித்து பேசினர். தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் கால விபத்து மீட்பு குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். ஆசிரியர்கள் ஹிதாயத்துல்லா, பிரகாஷ், அலி அக்பர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட சாரணிய பிரதிநிதி மரிய ஆக்னெஸ் நன்றி கூறினார்.