பேரிடர் மீட்பு ஒத்திகை
சிம்ஸ் பூங்கா ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதையொட்டி பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலையோரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறிய கால்வாய்களில் அடைப்பு அகற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பேரிடர் மீட்பு ஒத்திகை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ஏரியில் நடைபெற்றது. நிலைய அலுவலர் குமார் தலைமையில் 20 தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து தத்ரூபமாக செயல்விளக்கம் அளித்தனர். அப்போது நீரில் தத்தளித்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் படகில் சென்று, நீரில் குதித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதனை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.