குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்


குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்
x

நகரில் அனுமதியின்றி உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

தனியாரிடம் ஒப்பந்தம்

புதுக்கோட்டை நகராட்சியின் இயல்பு கூட்டம், நகர்மன்ற கூடத்தில் நகர் மன்ற தலைவர் திலகவதி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ரா, துணை தலைவர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நகர்மன்ற தலைவர் பேசுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.75 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதற்கு டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது. தூய்மை பணிக்காக தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று குப்பைகள் பெறப்படும். இதற்காக 288 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகராட்சிக்கு 14 எம்.எல்.டி. குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் 6, 7 எம்.எல்.டி. வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைபடும்போது ெஜனரேட்டர் வைத்து குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

துணை தலைவர் லியாகத் அலி பேசுகையில், நகர்மன்ற கூட்டம் தொடங்கும் போது நகராட்சி அதிகாரிகள் தாமதமின்றி உரிய நேரத்தில் வந்து உறுப்பினர்கள் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் கூறியதாவது:-

புதிதாக சாலை

தி.மு.க.வை சேர்ந்த சுப.சரவணன்:- தார்சாலை போடப்படுவது தரமானதாக இல்லாததால் புதிதாக சாலை போடவேண்டும்.

தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி:- மறைமலை நகர் குடியிருப்பு பகுதி ஏ சோனாக பிரிக்கப்பட்டுள்ளதால் கடுமையாக வரி வதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியை ஏ சோனிலிருந்து மாற்றி, வரியை குறைக்க வேண்டும்.

குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்

காங்கிரஸ் உறுப்பினர் ராஜா முகமது:- நாய் தொல்லை அதிகம் உள்ளது. நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆடு, மாடு மற்றும் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. இதில் கன்றுகுட்டி, ஆடுகள் செத்து வருகிறது. நகரில் அனுமதியின்றி உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.

முன்னதாக அவர் திடீரென தான் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை விரித்து காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பு தொல்லை

ஜாபர் பர்வேஸ் (விஜய் மக்கள் இயக்கம்):- 1, 2, 3, 4 ஆகிய வார்டுகளுக்கு தூய்மை பணியார்களுடன் சேர்த்து கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தெருவிளக்குகள் பல இடங்களில் எரிவதில்லை. சோலார் விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். பாம்பு தொல்லை அதிகம் உள்ளது. இதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு ராஜேஸ்வரி:- எனது வார்டில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் யாரும் வரமாட்டீர்களா? என்று கேட்டார். இதனால் உறுப்பினர்களுக்கு இடையே காரசார வாதம் ஏற்பட்டது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்

மூர்த்தி:- நகராட்சிக்கு ரூ.27 கோடிக்கு வரி பாக்கி இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காரணம் கூடுதல் வரிவிதிப்புதான். எனவே ஏ.பி.சி. சோன் என்பதை மாற்ற தனி தீர்மானம் போட வேண்டும். ஓட்டல்களில் சாப்பிட்ட இலை எடுக்க ரூ.750 செலுத்துகின்றனர். சில நேரங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதாக புகார் அளிக்கின்றனர். எனவே தினமும் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிறப்பு, இறப்பு சான்றுகளை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் பல்வேறு உறுப்பினர்களும் பேசினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்கு ஆணையர் பதில் கூறுகையில், நடந்து முடிந்த பணிகளுக்குத்தான் தணிக்கை செய்யப்படுகிறது. தணிக்கை அறிக்கை சுமார் ஆயிரம் பக்கம் இருப்பதால் அனைவருக்கும் கொடுக்க முடியாததால் நகராட்சியில் உள்ளதை பார்த்துக்கொள்ளலாம். நகரில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பையும், ரூ.27 கோடிக்கு வரி பாக்கி உள்ளதை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கு பதில் அளித்தார்.


Next Story