அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x

திருத்தங்கல் பகுதியில் அனுமதியின்றி கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் பகுதியில் அனுமதியின்றி கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் இணைப்புகள்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கான ஆண்டுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினிேயாகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் உரிய அனுமதியின்றி சிலர் தங்களது வீடுகளில் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இருந்து இணைப்பு எடுத்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கலை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்றம் நடுவத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து திருத் தங்கல் பகுதியில் உரிய அனுமதியின்றி பெறப்பட்ட இணைப்புகளை துண்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக திருத்தங்கல் பகுதியில் மாநகரட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் இணைப்பு உரிய அனுமதியுடன் பெறப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ரமேஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, திருத்தங்கல் பகுதியில் சுமார் 400 குடியிருப்புகளில் உரிய அனுமதியின்றி குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைப்பு பெற உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் சிலர் அடுத்து வரும் நாட்களில் உரிய கட்டணம் செலுத்தி விடுவதாக கூறி உள்ளனர். விண்ணப்பிக்க தவறியவர்கள் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகள் துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து குடிநீர் இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story