தள்ளுபடி, இலவசத்திற்கு ஏமாறாதீர்கள்


தள்ளுபடி, இலவசத்திற்கு ஏமாறாதீர்கள்
x

தள்ளுபடி, இலவசத்திற்கு ஏமாறாதீர்கள் என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

தள்ளுபடி, இலவசத்திற்கு ஏமாறாதீர்கள் என்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற நுகர்வோர் குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் உணவு பொருள் வழங்கல் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏமாறாதீர்கள்

நுகர்வோர்கள் தள்ளுபடி, இலவசத்திற்கு ஏமாறாதீர்கள். எந்த பொருள் வாங்கினாலும் ரசீது கேட்டு வாங்கவும். உத்திரவாதம் இல்லாத பொருட்களை வாங்கக் கூடாது. எந்த பொருள் வாங்கினாலும் அதன் தரத்தை பார்த்து வாங்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறது என்று ஏமாந்து விடக்கூடாது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நுகர்வோர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட குறை தீர்வு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரை அணுகலாம்.

புகார் தெரிவிக்கலாம்

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் இருந்தால், அவற்றை மாற்றி வழங்க உத்தரவிடப்படுகிறது. இது குறித்து புகார்கள் இருந்தாலும் மாவட்ட குறைதீர்வு அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் அலுவலர்கள், நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story