கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு


கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
x

நரிக்குடி அருகே கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்



நரிக்குடி அருகே கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வு

திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள டி. வேலங்குடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னன் கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டு பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது

இதுகுறித்து ஆய்வு மையத்தின் செயலர் சாந்தலிங்கம் கூறியதாவது:-

நரிக்குடி அருகே உள்ள டி.வேலங்குடி கிராமத்தில் பாண்டிய நாட்டு ஆய்வு மையத்தின் சார்பில் ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமத்தின் வடபுறம் உள்ள வெயிலுகந்தம்மன் கோவிலில் உள்ள திடலில் ஒரு கல் தூணில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதனை படி எடுத்து படித்தனர். இதன் மூலம் கல்வெட்டு கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் (1553 முதல் 1529-ம் ஆண்டு வரை) இப்பகுதியில் சிற்றரசன் திம்மண்ணநாயக்கர் என்பவரால் வேலங்குடி கிராமம் 4 வேதங்கள் கற்ற பிராமணர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தனர்.

ராமேசுவரத்திற்கு யாத்திரை

வேலங்குடி என்னும் கிராமம் கொக்கரசர் வேலங்குடி என்று அழைக்கப்பட்டது. சுந்தரபாண்டிய வளநாடு என்னும் பெரும் பிரிவுக்குள் அடங்கி இருந்தது. ஊரின் மற்றொரு பெயராக சென்னவநாயகபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொக்கரசர் என்ற பெயர் 1336 இல் ஹம்பியை தலைநகராக கொண்டு விஜயநகர பேரரசை நிறுவிய ஹரிஹரர் புக்கர் என்ற சகோதரர்களில் ஒருவரின் பெயராகும்.

அவர் பெயரும் வேலங்குடிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் தனது ஆட்சி காலத்தில் ராமேசுவரத்திற்கு யாத்திரை வந்துள்ளார். அவர் திரும்பும் போது மதுரையில் சில காலம் தங்கியிருந்தார். இன்றைய காக்காச்சி அம்மன் சன்னதி பின்புறத்தில் ஒரு மண்டபத்தில் கிருஷ்ணதேவராயரின் முழு ஆளுயர சிற்பம் உள்ளது.

எச்சரிக்கை வாசகம்

அழகர்கோவில் கல்வெட்டு ஒன்றில் திம்மண்ண நாயக்கர் என்ற அதிகாரி குறிப்பிடப்படுகிறார். இந்த அதிகாரி தான் வேலங்குடி கிராமத்தை கொடையளித்துள்ளார். இன்றைய வேலங்குடி கிராமத்திற்கு மதுரை வைகை ஆற்றில் திருப்பாச்சேத்தி என்ற இடத்திலிருந்து கால்வாய் 3 ஆக பிரிந்து வேளாண் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பொக்கரசர் கால்வாய் என்று பெயர் வழங்கியுள்ளது.

தற்போது பெரிதும் ஆக்கிரமிப்பு உள்ள கால்வாயினை மீட்டெடுத்து தண்ணீர் கொண்டு வர வேலங்குடி கிராம மக்கள் முன்னெடுப்புகள் மேற்கொண்டுள்ளனர். கல்வெட்டின் இறுதியில் தானத்திற்கு மாறாக பேசியவர்கள் கங்கை கரையில் பசுபலி செய்த பாவியாவான் என்ற எச்சரிக்கை வாசகம் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் முடிவில் குடையும், கொடிமரமும், பூரண கும்பமும் கோட்டோவியங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story