முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பழங்கால செப்பு பட்டயங்கள் கண்டெடுப்பு
முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பழங்கால செப்பு பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சுவடித்திட்ட பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தலைமையில் பேராசிரியர்கள் முனியாண்டி, தமிழ் சந்தியா, பிரகாஷ் குமார் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பழங்காலத்தை சேர்ந்த 4 செப்பு பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் சுவடித்திட்ட பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது:- முசிறி கோவிலில்
கிடைத்துள்ள செப்பு பட்டயங்களில் விஜய நகரமன்னர்களின் வெற்றிச் சிறப்பும், பட்டப்பெயர்களும் திக்விஜயம் செய்த நிலையும் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, விஜயநகரப் பேரரசர்கள் ஈழத்தை வென்றது, ராட பாணாயன்பட்டணம் அழித்தது, திருகோணமலையை வென்றது, வாதாபியை வென்றது, சோழ மண்டலத்தையும் பாண்டிய மண்டலத்தையும் வென்றது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மேலும் விஜய நகர பேரரசை ஆண்ட தேவ மகாராயர், மல்லிகார்ச்சுன ராயர், வீர நரசிங்கராயர், விச்சவராயர், விசைய ராயர், பல்லகஷ்தன் தேவராயர், விருப்பாட்சி தேவராயர், பிரபு பட தேவராயர், பிரதாப தேவராயர், நிமிம்பகத் தேவராயர், வசவ தேவராயர், வச்சிரவாகு தேவராயர், புசபலதேவராயர், பூதி ராயர், உத்தமல்லையதேவராயர், சென்ன வீர தேவராயர், தன் மராயர், ஈசுவரப்ப நாயக்கராயர், நரசாண் நாயக்க ராயர், கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர், சதாசிவராயர், மகாராமா சீரங்கா ராயர், வேங்கிடபதி ராயர் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது மன்னர்கள், பாளையக்காரர்கள் செப்பேடுகளை வெளியிடும் போது தங்கள் முன்னோர்களின் வெற்றிப் பெருமைகளையும் முன்னோர் பெயர்களையும் குறிப்பிடும் மரபின் அடிப்படையிலானதாக அமைகிறது.எனினும் விஜய நகர பேரரசர்களின் அரிய பல பெயர்கள் இப் பட்டயங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நாயக்கமன்னர்கள் பேரில் ஏற்படுத்திய தர்மக் கட்டளை மானியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.