நெல்லையப்பர் கோவிலில் பழங்கால செப்பேடுகள் கண்டுபிடிப்பு


நெல்லையப்பர் கோவிலில் பழங்கால செப்பேடுகள் கண்டுபிடிப்பு
x

நெல்லையப்பர் கோவிலில் பழங்கால செப்பேடுகள், செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் பழங்கால செப்பேடுகள், செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பழங்கால செப்பேடுகள்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள அரிய ஓலைச்சுவடிகள், செப்பு பட்டயங்கள், செப்பேடுகளை அடையாளம் கண்டு பாதுகாத்திடும் வகையில், சுவடியல் துறை பேராசிரியர் தாமரை பாண்டியனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு செயல்பட்டு வருகிறது.

நெல்லையப்பர் கோவிலில் பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையில், சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 2 பழங்கால செப்பேடுகளும், 8 செப்பு பட்டயங்களும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து பேராசிரியர் தாமரை பாண்டியன் கூறியதாவது:-

புதிய நிலங்களுக்கு வரி விதிப்பு

நெல்லையப்பர் கோவிலில் கண்டறியப்பட்ட முதலாவது செப்பேடு கி.பி. 1299-ம் ஆண்டு எழுதப்பட்டது. அதில், வஞ்சி சேரகுல ராமபாண்டியன் தனது படைத்தலைவர்களில் ஒருவரும் நாங்கீசுவரனேரி என்ற ஊரின் பொறுப்பாளருமான மாதேவன் சேரமான்பிள்ளையின் புதிய நிலங்களுக்கு வரி விதித்தது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அதில், குளம் வெட்டப்பட்டும், தரிசு நிலங்கள் திருத்தப்பட்டும் புதிய விளைநிலங்கள் உருவானதால் புதிய வரிவிதிப்பு செய்ய வேண்டிய சூழல் உருவாகியது. எனவே அந்த நிலங்களை தரம்பிரித்து முதல் தர நிலங்களுக்கு வெங்கல ஓசைப்படியால் 41 கோட்டை நெல்லும், 2-ம் தர நிலங்களுக்கு செப்பு ஓசைப்படியால் 6¾ கோட்டை நெல்லும் வரியாக வழங்க உத்தரவிடப்பட்டது. அந்த நெல்லில் 7 கோட்டை நெல்லை திருநாகீசுவரர் சிவகாமி அம்மன் கோவிலின் உதயமார்த்தாண்டன் கட்டளைக்கு தேவதானமாகவும், மேலும் அவ்வூரில் உள்ள பூலாவுடையார் அய்யனார் கோவிலுக்கு அய்யன்பாத்தியாக முக்கால் கோட்டைக்கு சற்று அதிகமான நெல் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

செகவீர ராமபாண்டிய கட்டபொம்ம நாயக்கர்

கி.பி. 1772-ம் ஆண்டு எழுதப்பட்ட 2-வது செப்பேட்டில், ஆசூர் வள நாட்டைச் சேர்ந்த பாஞ்சாலங்குறிச்சியில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மநாயக்கரின் மகன் செகவீர ராமபாண்டிய கட்டபொம்ம நாயக்கர் கீழவேம்பு நாட்டில் நெல்லை தலத்தை சேர்ந்த முத்துலிங்கபட்டரின் புத்திரன் சிவஞானபட்டருக்கு தர்ம பிரதான சாசனம் எழுதி கொடுத்தது பற்றி தெரிவிக்கிறது.

மேலும் அதில், நெல்லை நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளுக்கு உச்சிகாலத்தில் நடக்கும் பூஜையில் அபிஷேகமும் நெய்வேதனமும் நடத்த திசைக்காவல் மானியமாக பெற்று வந்த 72 பொன்னினை வழங்கிய செய்தியும் கூறப்பட்டு உள்ளது.

கோவில்களுக்கு தானம்

5 செப்புப்பட்டயங்களை ஆய்வு செய்தபோது, அவைகள் கோவிலுக்கு வழங்கிய தானங்கள் பற்றி பேசுகின்றன. கி.பி. 1682-ம் ஆண்டு எழுதப்பட்ட முதலாவது பட்டயத்தில் ரங்ககிருட்டிணமுத்து வீரப்பநாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. கி.பி. 1695-ம் ஆண்டு எழுதப்பட்ட 2-வது பட்டயத்தில் விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம் குறித்து கூறப்படுகிறது.

கி.பி. 1695-ம் ஆண்டு எழுதப்பட்ட 3-வது செப்பு பட்டயத்தில் விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ரங்ககிட்டிணமுத்து வீரப்ப நாயக்கர் உள்ளிட்ட பலரும் புண்ணியம் பெற்றிட மேற்படி கோவில் பூஜைக்கும், திருப்பணிக்கும் நம்பிமார், தானத்தார், தலத்தார் ஆகியோர் நிலதான பிரமாணம் வழங்கிட வீரகேரள முதலியார் கட்டளையிட்டது பற்றியும், தானம் வழங்கப்பட்ட நில எல்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கி.பி. 1700-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட 4-வது பட்டயத்தில் ரங்க கிருஷ்ணமுத்துவீரப்ப நாயக்கர் அளித்த கொடை குறித்து எழுதப்பட்டு உள்ளது. கி.பி. 1751-ம் ஆண்டு எழுதப்பட்ட 5-வது பட்டயத்தில் லாலுகான் சாய்பு பெயரில் வழங்கப்பட்ட தானம் குறித்து கூறப்படுகிறது. மேலும் 3 செப்பேடுகள் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story