பெண்ணாடம் பிரளயகாலேசுவரர் கோவிலில் பழமையான அப்பர் சிலை கண்டெடுப்பு
பெண்ணாடம் பிரளயகாலேசுவரர் கோவிலில் பழமையான அப்பர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
பெண்ணாடம்,
பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற பிரளய காலேசுவரர் உடனுறை அழகிய காதலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் 5-ம் நாள் விழா அப்பருக்கு சூல முத்திரை இடும் திருவிழா சிறப்பானதாகும். அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள் சூல இடப முத்திரை பதித்து செல்வார்கள். இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி பிரளயகாலேசுவரர் கோவிலில் திருப்பணி கடந்த ஜனவரி 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சாமி சன்னதியின் மகா மண்டபத்தின் வலது புறத்தில் பள்ளம் தோண்டியபோது சுமார் 2½ அடி உயரத்தில் கைகூப்பி நின்ற நிலையில் அப்பர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து திருப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கோவில் செயல் அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கோவில் பணியாளர்களுடன் அங்கு விரைந்து வந்து அப்பர் சிலையை பார்வையிட்டு பின்னர் அதை கைப்பற்றி கோவில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைத்தனர். இந்த அப்பர் சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்து தெரிவிக்கும் என கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.