குன்றத்தூர் ஒன்றியத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு - தொல்லியல் துறையினரின் அகழாய்வு பணி தொடக்கம்


குன்றத்தூர் ஒன்றியத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு - தொல்லியல் துறையினரின் அகழாய்வு பணி தொடக்கம்
x

குன்றத்தூர் ஒன்றியத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து தொல்லியல் துறையினர் அகழாய்வு பணியை தொடங்கினர்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் அதே பகுதியில் சிறிய அளவில் மேற்கூரை அமைத்து சிவலிங்கத்தை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 3 தொல்லியல் மேடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு கிடந்த பானை ஓடு மற்றும் கற்கள் கி.மு. 300 முதல் கி.பி 300-ம் ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தொல்லியல் துறைக்கு அனுமதி கிடைத்தது.

இதனை தொடர்ந்து நேற்று வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொடங்க பூமி பூஜை நடந்தது.

சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமை தாங்கி அகழாய்வு பணியை தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ், வெற்றிச்செல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர். அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

வடக்குப்பட்டு நத்தமேடு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் மேடு உள்ளது. இங்கு 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் என்ற அளவில் அகழாய்வு செய்ய பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வு பணி 3 மாதங்கள் வரை நடைபெறும். அகழாய்வின் போதுதான் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பது தெரிய வரும். கிடைக்க பெறும் பொருட்கள் தடயங்களையடுத்து பணிகள் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story