ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த குமிழி கல்வெட்டு கண்டெடுப்பு


ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த குமிழி கல்வெட்டு கண்டெடுப்பு
x

ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த குமிழி கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்த திருப்பாச்சேத்தியில் உள்ள வடக்கு கண்மாயின் கிழக்கு கரையில் உடைந்த நிலையில் உள்ள குமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோ தலைமையில் அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர், தொல்லியல் ஆராய்ச்சி துறை மாணவர்கள் சீனன், இளந்திரையன் ஆகியோர் திருப்பாச்சேத்தி கண்மாய் பகுதியில் தொடர்ச்சியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் முத்துக்குமரன், அய்யப்பன், சோனைமுத்து ஆகியோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் செய்த கள ஆய்வில், வடக்கு கண்மாயில் அய்யனார் கோவில் அருகே உள்ள கொசவமடை மதகு பகுதியில் உடைந்து போன ஒரு குமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்த பழைய மதகை உடைத்து விட்டு புதிய மதகு கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் போது கல்வெட்டுகள் உடைக்கப்பட்டு கண்மாயில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு சிறு துண்டு கல்வெட்டு மட்டும் 3 வரிகளுடன் காணப்படுகிறது. கல்வெட்டின் மேல் பகுதியில் இரு வரிகளும், சிறிது இடம் விட்டு ஒரு வரியும் காணப்படுகின்றது. இந்த கல்வெட்டின் மூலம் ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட மதகு என்ற செய்தியை மட்டும் அறிந்து கொள்ள இயலுகிறது. இதனுடைய மற்றொரு பகுதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. மதகு வழியாக நீர் வெளியேறும் இடத்தில் இவை வைக்கப்படுவதால் குமிழி கல்வெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டுகள் பழங்கால பாசன முறையில் நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டின் சமூக நடைமுறைகளையும் வெளிப்படுத்துபவையாக உள்ளன. எனவே இத்தகைய கல்வெட்டுகளை பதிவு செய்வதோடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் கூறியுள்ளார்.


Next Story