திருக்கோவிலூரில் சோழர்கால தூண் சிற்பம் கண்டெடுப்பு

திருக்கோவிலூரில் சோழர்கால தூண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்,
கள ஆய்வு
கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான சிங்கார உதியன் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், மு.கலியபெருமாள், பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், நல்நூலகர் மு.அன்பழகன் ஆகியோர் ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது திருக்கோவிலூர் பிடாரி அம்மன் கோவிலுக்கு வெளியே இடைக்கால சோழர்களின் தொடக்கக்கால மன்னர்களின் மூவிலை நெடுவேல், முத்தலைவேல், சூலப்படை என வழங்கும் சூலத்தூண் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
சூலஸ்தாபன தூண் சிற்பம்
இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், சூலஸ்தாபன தூண் சிற்பத்தின் நான்கு பக்கங்களிலும் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சூலத்தூணின் முதல் பக்கத்தில், நீளமான சூலம் வெட்டப்பட்டுள்ளது. சூலம் சிவபெருமானின் முக்குணங்களையும் குறிப்பதாகும், சிற்பத்தின் மேல்பகுதியில் காணப்படும் குடை, பிற அணிகலன்களில் ஒன்றாகக்காணப்படும். அடுத்து பிறையை அணிகலனாக அணிந்திருக்கும் சிவபெருமான் போல தூணின் தலைப்பகுதியில் பிறை காணப்படுகிறது. சூலத்தின் இரண்டு புறத்திலும் குத்து விளக்கு உள்ளது. குத்து விளக்கே தீபமாகக் கருதி, இத்தீபமே ஆகாயமாகக் கருதப்படுகிறது. இச்சூல வழிபாடு மிக முக்கியத்துவம் பெற்றதாகும்.
சிவனை வழிபட்டு வந்த மக்கள் இச்சூலத்தையும் சிவனாகக்கருதி வழிபட்டுள்ளனர். தூணின் இரண்டாம் பக்கத்தில் சூலமும், பிறையும் உள்ளது. சூலத்தூணின் மூன்றாம் பக்கத்தில் சூலமும், பிறையும் மட்டுமே உள்ளது. நான்காவது பக்கத்திலும், சூலமும், பிறையும் வெட்டப்பட்டுள்ளது.
9-ம் நூற்றாண்டு
இவ்வாறு குடை, பிறை, இரட்டைச்சாமரம், பெரியசூலம், பீடத்தில் குத்து விளக்குகள் என்று வெட்டப்பட்டுள்ளது தமிழக சிற்பக்கலைக்கு முதல் வரவாக இருக்கலாம். இதனுடைய அமைப்பினை பார்க்கும்போது, இது இடைக்காலச்சோழர்களின் தொடக்கக்கால மன்னர்கள் காலமான 9 அல்லது 10-ம் நூற்றாண்டு தூண் சிற்பமாகும்.
கொடை, வெண்சாமரம், விளக்கு போன்ற மங்கலச்சின்னங்கள் காட்டப்படுவது சோழச்சிற்பங்கள் ஒரு சிலவற்றில் காணப்படுவதாகும். குறிப்பாக இந்த தூண் சிற்பத்தில் பிறை காட்டப்பட்டுள்ளது சிறப்புமிக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின்போது யோகா கண்ணன், ஆசிரியர்கள் மா.அல்லி, உலகமாதேவி, ஜே.மரியசகாயமெஜிலா ஆகியோர் உடன் இருந்தனர்.






