கலசபாக்கம் பகுதியில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


கலசபாக்கம் பகுதியில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
x

கலசபாக்கம் பகுதியில் 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

கலசபாக்கம் பகுதியில் 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, சிவா, நலன் சக்கரவர்த்தி, கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலசபாக்கம் தாலுகா வீரளூர், கடலாடி, மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரையிலான 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது:-

கடலாடி கிராமத்தில் சாலையருகே உள்ள ஏரியில் பலகைக்கல்லில் 13 வரிகளில் ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு கன்னரதேவனின் 20-வது ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது.

தற்போதைய செஞ்சி பகுதியான சிங்கபுர நாட்டு பெருவழி தாயனூர் என்ற ஊரை சேர்ந்த சிற்றையன் மன்றையன் என்பவர் ஏரியை பராமரிப்பதற்காக ஏரிப்பட்டியாக நிலம் தானம் அளித்ததை குறிப்பிடுகிறது. ஏரிப்பட்டி என்பது ஏரி போன்ற நீர்நிலைகளை பராமரிக்க அளிக்கும் மானியம் ஆகும்.

சேவை

மேலும் கலசபாக்கத்தை அடுத்த வீரளுரில் இருந்த பாழடைந்த கோவில் அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று 24 அடி நஞ்சை நிலத்தின் அளவை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேல்சொழங்குப்பம் கிராமத்தில் கோவில் மண்டபத்தில் உள்ள 17-ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள தூண் கல்வெட்டில் தொண்டவ செட்டியின் மகன் பெத்த செட்டி என்பவர் மண்டபம் கட்டி தொடர்ந்து சேவை செய்து வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதமங்கலத்தை அடுத்த தாதாபாளையத்தில் மணிமோசி அய்யர் என்பவரின் தர்ம செயல்களை பற்றி பலகைக்கல் வெட்டு குறிப்பிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கிடைத்த இக்கல்வெட்டுகள் மூலம் அப்பகுதியில் நிலவிய அரசியல், அறப்பணிகள் பற்றிய புதிய செய்திகள் தெரியவந்துள்ளன. எனவே அரசு இவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story