பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிப்பு
கோவில்பாளையத்தில் நடந்த ஆய்வில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை
கோவில்பாளையத்தில் நடந்த ஆய்வில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவில்பாளையம்
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, தொழில், நாகரிகம் ஆகியவை ஆய்வு மூலம் கண்டறியப்படுகிறது. அந்த வகையில் கோவை யில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பாளையத்தில் கிடைத்த பொருட்கள் மூலம் பழங்கால மக்கள் வசித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு மூலம் கிடைத்த பொருட்கள் மற்றும் சில தடயங்கள் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறை பேரா சிரியர் ச.ரவி, தனது மாணவர்களுடன் வந்து ஆய்வு நடத்தினார்.
இது குறித்து பேராசிரியர் ச.ரவி கூறியதாவது:-
தடயங்கள்
கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம் என்றும், கல்வெட்டில் கவையன்புத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வழியாக செல்லும் கவுசிகாநதியின் ஓரத்தில் இருக்கும் காலகாலேஸ்வரர் கோவில் அருகே திருநீற்றுமேடு, பூதிமேடு, நத்தமேடு என்று அழைக்கப்படும் சாம்பல்மேடு பகுதியில் ஆய்வு செய்தபோது கல்லாயுதங்கள் கிடைத்தன.
இதன் மூலம் அங்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததும், அவர்கள் அந்த ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான தடயங்களும் கிடைத்து இருக்கிறது.
சாம்பல்மேடு என்பது கால்நடைகளை தொழிலாக கொண்டு பழங்கால நாடோடி மக்கள் வாழ்ந்து வந்ததற்கான இடமாக கருதப்படுகிறது.
சோழர், பாண்டியர் ஆட்சி
கால்நடை சாணத்தை அந்த காலத்து மக்கள் மற்றொரு இடத்துக்கு செல்லும்போது எரியூட்டிவிட்டு செல்வார்கள். இதில் தமது கால்நடைகளை ஓட்டினால் அவை நோயின்றி வாழ்வதாக நம்பிக்கையும் அவர்களிடம் உண்டு.
அங்குள்ள காலகாலேஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் கொங்கு சோழர், கொங்கு பாண்டியர்கள் இந்த பகுதியை ஆட்சி செய்ததை உறுதிபடுத்துகிறது.
சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்ட சில்லுகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்டு உள்ள ஓடுகள், வேலைப்பாடுகளுடன் கூடிய சிவப்பு கருப்பு மட்கல ஓடுகள் கிடைத்து உள்ளன.
அகழ்வாராய்ச்சி
மேலும் நெசவு நெய்தலின்போது கரடு முரடாக இருக்கும் நூல்களை வழுவழுப்பூட்ட பயன்படுத்தப்பட்ட கற்கள், இரும்பு ஆயுதம், மணிகள் செய்வதற்கு பயன்படுத்தும் வெள்ளை பளிங்கு மூலக் கற்கள் என்று ஏராளமான பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதை ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும் இங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிகமாக கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.