நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
சாத்தூர் அருகே நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
சாத்தூர் அருகே நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கள ஆய்வு
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரெ.விஜயராகவன் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்களான ராஜபாண்டி (வரலாற்றுத் துறை பேராசிரியர்), சரத்ராம், காசிராஜன், பழனிகுமார் (தமிழ் பேராசிரியர்) ஆகியோர் சாத்தூர் இருக்கன்குடி அருகே கைலாசபுரத்தில் மேற்புற கள ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஒரு கல்வெட்டை கண்டறிந்தனர். இக்கல்வெட்டை ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனரான சாந்தலிங்கம் உதவியோடு படித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 4 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட இந்த கல்வெட்டில் 29 வரிகள் காணப்படுகின்றன.
அதில் கி.பி. 1666-ம் ஆண்டு பங்குனி மாதம் 25-ம் தேதி, சொக்கநாத நாயக்கர் மட்டும் வடமலையப்பன் புண்ணியகைலாசநாத சுவாமிக்கு நிலக்கொடையாக (திருவிடையாட்டம்) நிலமானது வழங்கியுள்ளார். அத்திருவிடையாட்டமாக கைலாசநாத நல்லூர் என்று அழைக்கப்பட்டதாகவும், இவ்வூரில் குடியேறிய மக்கள் எவ்வித வரியும் செலுத்த வேண்டாம் என்றும் ஊர்சபை கூடி முடிவு எடுத்ததாகவும் இந்த கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டு
இந்த கல்வெட்டில் சில இடங்களில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உள்ளதால் அதன் உண்மைப் பொருளை அறிய முடியவில்லை. நாயக்கமன்னர் காலத்தில் கைலாசநாதநல்லூர் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது மருவி கைலாசபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சொக்கநாத நாயக்கர் (கி.பி.1659-86) மதுரையை ஆட்சி செய்த 9-வது நாயக்க மன்னர் ஆவார். இவருடைய மனைவி ராணிமங்கம்மாள் ஆவார். விருதுநகர் மாவட்டத்தில் இந்த மன்னருடைய கல்வெட்டுக்கள் திருச்சுழி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி ஆகிய ஊர்களில் காணப்படுகிறது.